Sunday, September 20, 2015

ஆலய இசை கருவிகள் - TEMPLE MUSIC INSTRUMENTS


தமிழ்நாட்டு ஆலய வழிபாட்டில் இசைக் கருவிகள்


     உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரின் குறிக்கோளும் இறைவனைச் சென்றடைவது தான் என்று ஆன்மீகவாதிகள் கருதினார்கள். அவனருளாலே அவன் தாள் பற்றுவதுதான் இறைவனைச் சென்றடையும் வழி என்றும் போதித்தார்கள்.
இறைவனிடம் பக்தி செலுத்தினால் உய்வடையலாம் என்று கொள்கை வகுத்தவர்கள், பக்தி ஒன்பது வகையில் செய்ய முடியும் என்ற னர். அவை ‘நவவித பக்தி’ என்று அழைக்கப் பட்டன. அவற்றுள் இறைவன் புகழைப்பாடும் ‘கீர்த்தனம்’ என்பதும் ஒன்று. இசை வழியே இறைவனைக் கண்டவர்கள் நம் முன்னோர்.
இசை,  மிடற்றிசை என்றும் கருவி இசை என்று இருவகைப்படும். மனிதனது குரல்கூட ஒரு இசைக்கருவிதான். அதை காத்திர வீணை என்றனர். குரலிசைக்குத் துணையாகக் கருவிகள் இசைக்கப்பட்டன. தனியாகவும் கருவிகள் இசைக்கப்பட்டன.
கடவுள் கொள்கையில் ஊறிய நம் முன்னோர் தம்மிடமுள்ள சிறந்தவற்றை யெல்லாம் இறைவனுக்கு அர்ப்பணித்தனர். பிரமிக்கத்தக்க வானுயர்ந்த கோபுரங்களுடன் கோவில்கள் எடுப்பிக்கப்பட்டன. பொன்னும், மணியும், பட்டும் கொண்டு இறை மூர்த்தங் களை அலங்கரித்தனர். நித்திய, பட்ச, மாத சம்வத்சர உற்சவங்களை நடத்தினர். ஆடல், பாடல் போன்ற நிகழ் கலைகளையும் அவனுக்கு அர்ப்பணித்து மகிழ்ந்தனர்.
கடவுளர் இசைக்கருவிகளோடு இணைத்து நினைக்கப்படுகின்றனர். சிவ பெருமானும் கையில் தமருகம் காணப்படுகிறது. பார்வதி வீணையுடன் காணப்படும்பொழுது மாதங்கி என்றும் திருமகள் வீணையுடன் காணப்படும் பொழுது வீணா இலக்குமி என்றும் அழைக்கப் படுகிறார்கள். கையில் வீணையுடன் உள்ள தென்முகக் கடவுளுக்கு வீணாதர தட்சிணா மூர்த்தி என்பது பெயர். கண்ணன் குழல் இசைப்பவன். நந்தி மத்தளம் கொட்ட இறைவன் ஆடுகிறான். அப்போது தாளம் போடுகிற பணி நான்முகனைச் சேர்கிறது.
வாராகி, காளி ஆகியோர் கரங்களில் சங்கும், ரௌத்திரி கரத்தில் தக்கையும் காணப்படு கின்றன.
தேவ இருடிகளும் இசைக்கருவிகளைக் கையாள்பவர்களாக வருணிக்கப்படுகிறார்கள். தும்புரு, நாரதர் இருவரும் வீணை வாசிப் பவர்கள். நாரதர் கையிலுள்ள வீணைக்கு மகதி என்று பெயர். கின்னர மிதுனங்கள், கின்னரம் என்னும் கருவியை இசைக்கின்றன.
திருவாலங்காட்டில் சிவபெருமான் ஆடுகின்றான். இனிமையாகப் பாடிக்கொண்டு, இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு அப்பன் ஆடுகின்றான். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இதை வருணிக்கிறது.
துத்தங்கைக் கிளை விளரி தாரம்
உழை இளிஓசைபண் கெழுமப் பாடிச்
சச்சரி கொக்கரை தக்கை யோடு
தகுணிதம் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்றோல்
தமருகம் குடமுழா மொந்தை வாசித்(து)
அத்தனை விரவினோடாடும் எங்கள்
அப்பன் இடம் திருவாலங் காடே.
சேரமான் பெருமாள் நாயனாரின் திருக்கைலாய ஞான உலாவில் இறைவன் புறப்பாட்டிற்கு வாசிக்கப்படும் இசைக்கருவிகள் கூறப்படுகின்றன.
சல்லரி தாளம் தகுணிதம் தத்தளகம்44
கல்லலகு கல்ல வடமொந்தை - நல்லியத்
தட்டழி சங்கம் சலஞ்சலந் தண்ணுமை45
கட்டிழியாப் பேரி கரதாளம் - கொட்டும்
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ் 46
இடமாம் தடாரி படகம் _ இடவிய

மத்தளம் துந்துபி வாய்ந்த முரு(டு) இவற்றால் 47
எத்திசை தோறும் எழுந்தியம்ப _ ஒத்துடனே
மங்கலம் பாடுவோர் வந்திறைஞ்ச  4
இறை வழிபாட்டில் இசையும், இசைக் கருவிகளும் பயன்படுத்தப்பட்டமை சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், உரையாசிரியர் தன் குறிப்புகள், கல்வெட்டுக்கள், பழங்காலச் சிற்பங்கள், ஓவியங்கள் வாயிலாகத் தெரியவருகிறது.
யாழ், பதலை, முழவு, தூம்பு ஆகிய கருவிகளுடன் கடவுளைப் போற்றி வழிபட்டனர் என்ற செய்தியைப் பதிற்றுப்பத்து தெரிவிக்கிறது.
புணர்புரி நரம்பின் தீந்தொடை பழுனிய
வணரமை நல்யா ழிளையர் பொறுப்பப்
பண்ணமை முழவும் பதலையும் பிறவும்
கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக்
காவிற்றகைத்த துறைகூடு கலப்பையர்
கைவ லிளையர் கடவுட் பழிச்சி
(பதிற்றுப்பத்து: 41: 1_6)
கோயில் வழிபாட்டு முறைகளில் இசைக்கருவிகள் பேரிடம் பெற்றிருந்தன. இராசராசன் காலத்தில் கோவில்களில் இசைக் கருவிகள் வாசிப்பவர்கள் நியமிக்கப்பட்ட செய்தியை ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது:
“ஸ்ரீ ராசராசேச்சுரம் உடையார்க்குத் திருப்பதிகம்
விண்ணப்பம் செய்ய உடையார் நடராச தேவர்
கொடுத்த பிடாரர்கள் நாற்பத் தெண்மரும்
இவர்களிலே நிலையாய் உடுக்கை வாசிப்பான்
ஒருவனும் இவர்களிலே நிலையாய்க் கொட்டி
மத்தளம் வாசிப்பான் ஒருவனும் ஆக ஐம்பதின்
மருக்குப் பேரால் நிசதம் நெல்லு முக்குறுணி
நிவந்தமாய் ராசகேசரியோ டொக்கும்
ஆடவல்லான் என்னும் மரக்காலால் உடையார்
உள்ளுர்ப் பண்டாரத்தில் பெறவும்’’
தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு ஆடற்கலையில் வல்ல நானூறு பெண்களையும், அவர்களை ஆட்டுவிக்கும் நட்டுவர்களையும், பாடுபவர்களான கானபாடிகள், கந்தர்வர்,
ஆரியம் பாடுவோர், தமிழ் பாடுவோர், முகவீணை, உடுக்கை, வீணை, கொட்டி மத்தளம், முத்திரைச் சங்கு, பக்க இசைக் கருவிகள், மேளம் ஆகிய கருவிகளை வாசிப்பவர்களையும் இராசராசன் நியமித்திருக்கிறான். இச்செய்தியினையும் இவர்கள் அத்துணை பேரின் பெயர்களையும் இராசராசனுடைய கல்வெட்டு தெரிவிக்கிறது.
1.இவ்வாறு பல கல்வெட்டுக்கள் கலைஞர்களை ஆதரித்த செய்திகளைத் தருகின்றன.
கோயில்களில் பயன்படுத்தப்பட்ட பல கருவிகள் இன்று பெயர் மட்டுமே தெரிகின்றனவாக உள்ளன. இவை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை, சிற்பங்களிலும், ஓவியங்களிலும் காணப்படுகின்ற பல கருவிகளை அவை என்ன என்று கண்டுபிடிக்க இயலவில்லை. ஒரு காலத்தில் இவை சாதாரணமாகப் புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும்.
சான்றாக, கும்பகோணம் நாகேசுவர சுவாமி கோயிலிலுள்ள செப்பேடு ஒன்றினைச் சுட்டலாம். துக்கோசி காலத்துச் செப்பேடு அது. அதன் நாள்: 5 - 4 - 1734. நாகபாசத்தார் (கலைஞர்கள்) எல்லோருமாகச் சேர்ந்து ஓர் அறக்கட்டளை வைத்திருக்கிறார்கள். இச்செப்பேட்டின் பின்புறம் புடைப்புச் சிற்பமாக நாற்பதிற்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் காணப்படுகின்றன. 2.(ஆபிரகாம்  பண்டிதர், கர்ணாமிர்த சாகரம் முதல் புத்தகம், பக்.15 - 173) அவற்றுள் பல கருவிகள் என்னவென்றே தெரியவில்லை. மூன்று நூற்றாண்டுகளுக்குள் இவ்வளவு மாற்றம் என்றால்; தேவார காலத்தில் கூறப்பட்டுள்ள பல கருவிகள் மறைந்து போய் விட்டதில் வியப்பில்லை. இன்னும் சங்க காலத்துக் கருவிகளைக் குறித்து எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. இழப்பதில் நாம் வல்லவர்கள்.
திருக்கோயில்களில் அர்த்த மண்டபம், மகாமண்டபம் போன்ற பல வகையான மண்டபங்கள் இடம்பெறுகின்றன. இவற்றுள் வாத்திய மண்டபம், வீணா மண்டபம், நிருத்த மண்டபம் ஆகியனவும் அடங்கும். கோவில்களில் கலைகளுக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பிடத்தை இதன் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. இதில் வாத்தியசாலை அமைக்கவேண்டிய இடம் குறித்த மரபும் உண்டு. இரண்டாம் பிரகாரத்தில் கிழக்கு திசைக்கும் வடகிழக்கு திசைக்கும் நடுவில் வாத்திய சாலை அமைக்கப்படுகிறது.
குடமுழுக்கு சடங்குகளில் ஒன்றான வாஸ்து சாந்தியில் நடைபெறும் வாத்திய பூஜையில் ஆடற் கலைகளும், இசைக் கருவிகள் இசைக்கும் கலைஞர்களும் ரட்சாபந்தனம் செய்து கொள்ள வேண்டும்.
திருக்கோயில்களின் தளவாட அறிக்கை களைத்தேடிப் பார்த்தால் அக்கோயில்களில் இருந்த இசைக் கருவிகளின் பட்டியல்கள் கிடைக்கின்றன. சான்றாக, அரங்கநாதர் ஸ்ரீரங்கம் கோவிலில் 1953ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இசைத்திருந்த கருவிகள்:
பெரிய மேளம் - 1
மேளம் (தவில், தாளம், ஒத்து,
நாயனம் 4 உருப்படிகள்)   - 3 ஜதை
    அதிக நாயனம்-1
    கவுரி காளை-2
    திருச்சின்னம்-1
    எக்காளை-1
    வீரவண்டி-1
    சேமக்கலம்-1
    சங்கு-1
    மங்கள வாத்தியம்-1
    நட்டு, முட்டு-2
    சுத்து மத்தளம்-1
    கொக்கை (உடுக்கை)-1
    பெரிய கைத்தாளம்-1
     பாரி-1
சிவன் கோவில்களில் பிரமோற்சவம் முடிந்து கொடி இறங்கிய பிறகு கோவிலைச் சுற்றி ஏழுமுறை வலம் வரும் சப்தப்பிரதட்சணம் என்ற சடங்கு நடைபெறும். அடியார்கள் சூழ இறைமூர்த்தங்கள் வலம் வரும்போது, ஒவ்வொரு திருவலத்திற்கும் அது எவ்வாறு வர வேண்டும் என்ற முறை உண்டு. இதில் இசைக்குச் சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. இறுதி இரு சுற்றுக்களில் கருவி இடம்பெறுகிறது. திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயிலில் சப்தப்பிரதட்சண சடங்கின் முறை:
    முதல் வலம்             -          மௌனம்
    இரண்டாவது வலம்   -          கட்டியம்
    மூன்றாவது வலம்     -          வேதம்
    நான்காவது வலம்      -          தேவாரம்
    ஐந்தாவது வலம்        -           இசை
    ஆறாவது வலம்         -           நட்டுமுட்டு
    ஏழாவது வலம்          -            நாதசுரம்
    “அஷ்டாதச வாத்தியங்கள்’’ என்று பதினெட்டுக் கருவிகள் இறைவழிபாட்டில் இடம் பெற்றிருந்தன. அப்பதினெட்டுக் கருவிகளின் பட்டியலை சீதாவிவாக சூர்ணிகை தருகிறது:
    “பேரி ம்ருதங்க மத்தள காகள துந்துபி துரீய தும்புரு வீணா வேணு நூபுர மட்டுக டிண்டிம டமருக ஜஞ்சரி ஜல்லரி தவள சங்க பணவ படக அஷ்டாதச வாத்யகோஷ’’
‘திருவாரூர் தியாராஜ பெருமாள் ஆலயத்திற்கு 18 இசைக்கருவிகள் உண்டு. அவை:
சர்வ வாத்தியம்
1. பாரி நாதசுரம்
2. பஞ்சமுக வாத்தியம்
3. கொடுகொட்டி
4. சுத்த மத்தளம்
5. நாட்டு தாளம்
6. ஜல்லரி (பெரிய தாளம்)
7. எக்காளம்
8. வாங்கா
9. கர்ணா
10. துத்தி
11. சங்கம்
12. சேமக்கலம்
13. டக்கா
14. பேரிகை
16. தவண்டை
17. புல்லாங்குழல்
18. திருச்சின்னம்.
செய்யூர் கோவிலில் சர்வ வாத்தியம் நிகழ்த்தப்படுகிறது. சர்வ வாத்தியம் என்றால் எல்லாக் கருவிகளும் என்று பொருள். கோயி லில் மிடற்றிசை, கருவியிசை ஆகிய அனைத்தையும் கடவுளுக்குப் படைத்து வழிபடுவதே சர்வ வாத்தியமாகும். இது நானூறு ஆண்டு களாக இக்கோயிலில் நிகழ்த்தப்படுகின்றது.
பேரா. சாம்பமூர்த்தி, செய்யூர் செங்கல்வராய சாத்திரி அவர்களின் உருப்படிகளையும் சுந்தரேச விலாசத்தையும் பதிப்பித்துள்ளார். அந்நூலில் சர்வவாத்தியம் குறித்தும் அது நிகழ்த்தப்பட வேண்டிய முறை குறித்தும் விவரித்துள்ளார்.
சர்வவாத்தியம் காமிக ஆகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷோடச உபசாரம் முடிந்த பிறகு சர்வ வாத்யம் தொடங்குகிறது. தொடர்புடைய அவதாரிகை வாக்கியத்தை சிவாச்சாரியார் ஓதிய பிறகு ஒவ்வொன்றாக நிகழ்த்தப்படும்.
சர்வ வாத்திய முறை
மிருதங்கம், பிரம்மதாளம், நட்டுவ தாளம், சேமக்கலம், மணி, கண்டாமணி ஆகியன ஒலிக்க தீபாராதனை; ஆசீர்வாதம் (சிவாச்சாரியார்); கட்டியம் (ஓதுவார்); பிறகு சர்வவாத்யம் தொடங்குகிறது:
1. பிரம்ம தாளம், குழித்தாளம் துணையுடன் நட்டுவனார் ஜதியும், பாடலும் இசைக்கிறார்.
2. நந்திகேசுவர வாத்தியம் (சுத்தமத்தளம் அல்லது மிருதங்கம்)
3. இராகம் (ஒரு இராகத்தின் ஆலாபனை)
4. புஷ்பாஞ்சலி
5. சுத்த மத்தளம்
6. நாட்டியம் (கோவில் ஆடல் மகளால் ஆடப்படுகிறது)
7. வீணை
8. வயலின்
9. முரளி
10. கிளாரினெட்
11. முகவீணை
12. கச்சேரி பேண்டு குழு (அல்லது) முகவீணை
13. வீணா நாட்டியம் (வீணைக்கருவியின் இசையுடன் ஆடப்படும் ஆடல்)
14. புஜங்க சுரம் (மகுடி)
15. புஜங்க நாட்டியம் (புஜங்க சுரத்தின் பக்க இசைக்கு ஆடப்படும் ஆடல்) மிடற்றிசை தொடங்குகிறது:
16. கீதம்
17. பிரபந்தம்
18. வர்ணம்
19. சூர்ணிகை
20. சுலோகம்
21. சீசபத்யம்
22. அஷ்டகம்
23. அஷ்டபதி
24. கீர்த்தனை
25. பதம்
26. ஜவாளி
27. தில்லானா
28. தேவாரம்
29. திருப்புகழ்
30. காவடிச்சிந்து
31. அருட்பா
32. பிள்ளைத்தமிழ்
33. தவளம்
34. பரணி
35. வெண்பா
36. கலித்துறை
37. கொச்சகம்
38. கலிப்பா
39. தாழிசை
40. ஆசிரிய விருத்தம்
41. மட்டி விருத்தம்
42. சலந்தை விருத்தம்
43. அம்மானை
44. வண்ணம்
45. உலா
46. வெண்ணிலா
47. குறவஞ்சி
48. இந்துஸ்தானி இசை
49. கன்னடப் பாடல்
50. ஊஞ்சல்
51. லாலி
52. ஹெச்சரிக்க
53. சோபானம்
54. மங்களம்
இசைக்கருவிகள்
55. திருச்சின்னம்
56. பூரி
57. தவளசங்கு
58. நபூரி
59. முகவீணை
60. பங்கா
61. ஒத்துடன் நாதசுரம்
62. டமாரம்
63. பஞ்சமுக வாத்தியம்
64. சங்கீத வாத்தியம் (நாதசுரம்/பெரியமேளம்)
65. தகோர வாத்தியம் (தாளம் இல்லாமல் டமாரத்தின் பக்க இசையுடன் நாதசுரம்)
66. ஜல்லரி வாத்தியம்
67. ஜய பேரிகை
68. நகரா
69. டங்கா
70. தமுர் வாத்தியம்
71. ராஜவாத்தியம்(தப்பட்டை பங்கையுடன்)
72. சர்வ வாத்தியம் : எல்லா துளைக்கருவிகளும், தோற்கருவிகளும் ஒன்றாய் ஒலித்தல். அப்போது நிறைவாக தீபாராதனை.
இதுவே சர்வ வாத்திய வழிபாட்டின் முறை ஆகும். உள்ளூர் வசதிக்கேற்ப இதில் மாறுதல் இருக்கலாம். சர்வவாத்திய வழிபாட்டு நிகழ்ச்சிக்கு 3, 4 மணி நேரங்கள் ஆகும்.
மிகப்பழமையான இவ்வழிபாட்டு முறையில் அவ்வப்பொழுது புதிதாக நம் இசைக்கு வந்து சேர்ந்த கருவிகள், இசை வடிவங்கள் ஆகியன வும் சேர்ந்துள்ளமையைச் சுட்டிக் காட்டுகிறார் பேராசிரியர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய ஜாவளி, காவடிச் சிந்து போன்ற இசை வடிவங்களையும், வயலின், கிளாரினெட் போன்ற கருவிகளையும் இதற்குச் சான்றுகளாகத் தருகிறார்.
இவ்வகைக் கருவிகள் அனைத்தும், கோவில் வழிபாட்டில் பங்கு பெற்றிருந்தன. பல கருவிகள் இன்று புழக்கத்தில் இல்லை. சில தொன்று தொட்டு இன்று வரை தொடர்ந்து பங்கு பெற்று வருகின்றன.
கவுத்துவம்
கோயில்களில் இறைவனுக்கு அர்ப்பணிக்கப் படுகின்ற கலைகளுள் ஒன்றான ஆடலில் கவுத்துவம், நவசந்தி கவுத்துவம் என இரண்டு வகைப்படும். இவ்விரு வகை கவுத்துவங்களும் கடவுள் சன்னதியில் இறைவனை வழிபடும் நடன நிகழ்ச்சிகளாக இருந்திருக்கின்றன.
சிவத்தலங்களில் பிர்ம்மோத்சவத்திற்காக கொடியேற்றும் போது நவசந்தி கவுத்துவமும், திருவாதிரை நாளில் நடராசர் புறப்படும் போது பஞ்சமூர்த்தி கவுத்துவமும் ஆடப்பட்டு வந்தன.
பஞ்சமூர்த்தி கவுத்துவம்
விநாயகர், முருகர், சம்பந்தர், சண்டிகேச்வரர், நடராசர் ஆகிய ஐவரைப் போற்றிப்பாடி ஆடுவது பஞ்சமூர்த்தி கவுத்துவமாகும்.
நவசந்தி
தமிழ்நாட்டில் சில சிவத்தலங்களில் பிரம்ம உத்சவத்திற்கு முன்பாகக், கொடியேற்றும் போது தேவதைகளைப் பக்தியுடன் பாடி ஆடும் ஆடல் வகையான நவசந்தி வழக்கத்தில் இருந்திருக் கின்றது. முதலில் கோவில்களில் இசைவடிவமாக இருந்து பின்னரே இது நாட்டிய வடிவம் பெற்றதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
திருவிழா தடையின்றி நடைபெற வேண்டும் பொருட்டு, பிரம்மா, இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானியன் ஆகிய திசைக்காவலர்களைப் பூசித்தலே நவசந்தி கவுத்துவம். இதன் அமைப்பு தற்கால இலட்சண கீத அமைப்பு ஆகும். முதலில் ஜதியும், பின்பு சாகித்திய ரூபமாக அந்தந்த தேவர்களைப் புகழ்ந்து அன்னாருக்குப் பிரீதியான ராகம், தாளம், வாத்தியம், ஆரோஹணம், அவரோ ஹணம், நிருத்தம், ஹஸ்தம், பண் என்னென்ன என்று விளங்கக் கூறி இறுதியில் ஜதி சொற் கட்டுடன் முடிக்கப்பெறுகிறது.3 சான்றாக,
குபேர சந்தி
கருவி                : கந்தர்ப்பம்
இராகம்              : மாளவஸ்ரீ
நிருத்தம்            : சந்தியா நிருத்தம்
ஹஸ்தம்           : பத்மகதம்
தாளம்                : கொட்டரி
பண்                    : தக்கராகம்
இராகம்               : மாளவஸ்ரீ ஆ:  ஸமகமபநிதநிபதநிஸ்
தாளம்                 : திஸ்ர ஏகம் அ : ஸ்நிபமகஸ 22வது மேளத்தில்.
தாதெய் தெய்ந் தத்தா தத்தணத தக ஜொனுத
தத்திமிததா தாகிடத தணத தக்கிட ஜொனுத
சங்க நிதி பதுமநிதி முதலாம் குபேரன் சந்திகட் காயுதம்
பரிவாக தீரன் விளங்கு மடியார்க்கு நிதி அருளும் உபகாரன்
செங்கை மழு மானேந்தும் சிவபக்தி நேசன்
சீருடைய யக்ஷ சகுலாதிய உலாசன்
தங்கு நவரத்ன சிம்மாசன ப்ரகாசன்
தருவாத்யம் கந்தர்ப்ப செந்தரிகி வாசன்
மாளவஸ்ரீ ஸாகாமாபா நீதாநீ பாநீஸ்
வரு சந்தியா நிருத்தம் பத்மகத அஸ்தம்
தாளமது கொட்டரீக தத்தீதக ஜொம்தா
தக்க ராகப்பண் தனபால கவுத்வம்
தக்கு திக்கு தக்கிட தொங்கிட கிடதகடன் தங்கி
கிடதக திக்கி தாம் தத்த தாம்தத்த தாம்
ஆடற்கலைக்குப் பெருந்தொண்டாற்றிய தஞ்சை நால்வர் குடும்பத்தினர் தஞ்சைப் பெருவுடையாருக்குத் திருவிழா நடைபெறும் பொழுது, திருவிழா தடையின்றி நடைபெற திசைக் காவலர்களை வழிபட இயற்றிய நவசந்தி கவுத்துவங்களை அவர்களின் வழித் தோன்ற லான இசைப்பேரறிஞர் கே.பி. சிவானந்தம் அவர்களும் சுரதாளக் குறிப்புக்களுடன் திருமதி. வைஜயந்திமாலா அவர்களின் வாயிலாக பதிப்பித்திருக்கிறார். கோவில்களிலிருந்து இன்றைக்கு மறைந்து விட்ட கவுத்துவங்களை நூல்வாயிலாக இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்த கே.பி. கிட்டப்பா, கே.பி. சிவானந்தம் அவர்களின் பணி போற்றத்தக்க தாகும்.
சிவன் கோவில்களில் கொடியேற்றத்தன்று எட்டுத் திக்குகளுக்கும் உரிய தேவதைகளுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. பிரம்மோற்சவம் முடியும் வரை ஊரில் எந்த விதமான இடை யூறும் ஏற்படாமல் அவ்வத்திசைகளில் இருந்து காக்கும்படி தேவதைகளை வேண்டுவதே இவ்வழிபாட்டின் நோக்கம் ஆகும்.  அவ்வாறு வழிபாடும் செய்யும் பொழுது தொடர்புடைய தேவதைகளுக்கான, பண்(தேவாரம்), இராகம் (நாதசுரம்), தாளம், கருவி, நிருத்தம் ஆகியன இடம் பெறுகின்றன.
சான்றாக, முதலில் பிரம்ம சந்தி:
                                       
கோபுர வாயில்: கிழக்கு
தியானம், ஆவாகனம், தூபம், தீபம், நைவேத்தியம், பலி ஆகியன முடிந்த பிறகு, தொடர்ந்து, “மஹாபேரீம் சந்தாட்யா தவண்டை’’ என்று அறிவித்ததும் கருவியைத் தட்டுவார்கள்.
பிறகு
பண்                    : மேச ராகம்
இராகம்              : மத்திமாவதி (நாதசுரம்)
தாளம்                : பிரம்ம தாளம் (தாளம்)
வாத்தியம்          : சச்சபுடம் (தவில்)
நிருத்தம்            : கமல நிருத்தம்
சகல வாத்தியம் : அனைத்துக் கருவிகளும்
இவ்வாறே எட்டுத் திசைகளுக்கும் நடை பெறும்.’’
வைணவக் கோவில்களிலும் கொடி யேற்றத்தன்று இத்தகைய வழிபாடு உண்டு.
இந்நூல் கோவில் வழிபாட்டில் இடம் பெற்ற கருவிகள், தெரிந்த கருவிகளின் அமைப்பு, பயன்பாட்டு முறையின் மரபு, இன்றைய நிலை, இவற்றை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர ஆலோசனைகள் என்று பல்வேறு களங்களில் உரத்துச் சிந்திக்கிறது.
வைணவத் தலங்களில் வைகானச முறையை மேற்கொள்ளும் கோயில்களில் விஷ்வக்ஷேணர், விஷ்ணு, சக்கரம், பிரம்மா, இந்திரன், அக்கினி, நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், கருடன் ஆகியோருக்கு உகந்த தாளம் நிருத்தம், இராகம், கருவி ஆகியவற்றால் வழிபாடு நிகழ்த்தப்படுகிறது.
சான்றாக, கருடன்:
தாளம்   : ஜய தாளம்; நிருத்தம் : குஞ்சித பாதம்;
இராகம் : வசந்தா; கருவி: பேரி




நன்றி கேசவன்